வெளி நோயாளிகள் பிரிவு கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும்

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வெளி நோயாளிகள் பிரிவு கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.;

Update:2023-03-21 00:15 IST

வால்பாறை

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வெளி நோயாளிகள் பிரிவு கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரி

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணியில் உள்ளனர். மேலும் மருத்துவ வசதியும் உள்ளது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகப்பேறு மருத்துவ சிகிச்சை சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் நேற்று வரை 12 பிரசவங்கள் நடைபெற்று உள்ளது. மேலும் மகப்பேறு மருத்துவ பெண் டாக்டரே, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுப்பதால் அவர்கள் முழுமையாக பயன் பெற்று வருகிறார்கள்.

வெளிநோயாளிகள் பிரிவு

இது தவிர கடந்த பிப்ரவரி மாதம் முதல் நேற்று வரை 7 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் எலும்பு முறிவு, தோல் வியாதி, பல் சிகிச்சை, இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு என்று சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் வெளி நோயாளிகள் பிரிவு வளாக கட்டிட பணி மட்டும் முடியாமல் கிடக்கிறது. இதனால் பருவமழை தொடங்குவதற்குள் முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொழில்நுட்ப பணியாளர்கள்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வெளி நோயாளிகள் பிரிவு வளாக கட்டிட பணி நடக்கிறது. ஆனால் அது ஆமை வேகத்தில் நடக்கிறது. கோடை காலம் முடிந்து பருவ காலம் தொடங்குவதற்குள் அதை முடித்தால் அனைத்து தரப்பினரும் பயன் அடைவார்கள். எனவே விரைவில் பணியை நிறைவு செய்ய வேண்டும். மேலும் தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாத மருத்துவ சிகிச்சை பிரிவிற்கும், ஆஸ்பத்திரி தூய்மை பணிகளுக்கும் விரைவில் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்