தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்

தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பொள்ளாச்சியில் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி பேசினார்.;

Update:2022-07-13 19:33 IST

பொள்ளாச்சி

தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பொள்ளாச்சியில் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டம்

தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவிற்கு ரூ.150-க்கு உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு தேங்காயை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வழங்கவும், சத்துணவு திட்டத்தில் சமையலுக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் பொள்ளாச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ-. கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் தாமோதரன், அமுல்கந்தசாமி, வி.பி.கந்தசாமி, தென்னந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கஸ்தூரிவாசு, எட்டிமடை சண்முகம், கொ.ம.தே.க-. மாவட்ட செயலாளர் நித்தியானந்தன், பா.ஜனதா மாவட்ட தலைவர் வசந்தராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. முன்னதாக பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உடனடியாக பணம்

கொப்பரை தேங்காய் கொள்முதலில் முறையாக அதிக கவனம் செலுத்தி பரவலாக கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தேங்காய்க்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும். பணம் கொடுக்க தாமதம் ஆவதால் வெளிமார்க்கெட்டில் தேங்காய்களை விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள். தற்போது அரசு நிர்ணயம் செய்த விலை கிலோவுக்கு ரூ.105.90 ஆகும். ஆனால் வெளிமார்க்கெட்டில் கிலோவுக்கு ரூ.80-க்கும் குறைவாக உள்ளது. விவசாயிகள் வறுமையின் காரணமாக வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யும் நிலைமை உள்ளது. மேலும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதை எல்லாம் தளர்த்தி தாரளமாக கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதோடு, கொள்முதல் காலத்தை நீட்டிக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை திரட்டி கட்சி சார்பற்ற முறையில் எதிர்காலத்தில் போராட்டம் நடத்தப்படும்.

தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி

கொரோனா காலத்தில் கூட தேங்காய் விலை குறையவில்லை. 20 ஆண்டு காலத்தில் இல்லாத வகையில் தேங்காய் ரூ.8 முதல் ரூ.9க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.3-க்கு விற்பனை ஆன தேங்காய் மட்டை 40 பைசாவிற்கு விற்பனை ஆகிறது. இந்த விலை வீழ்ச்சி விவசாயிகளின் தலையில் தான் விழுகிறது. உற்பத்தி செய்யப்படுகின்றன தென்னை நார் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கண்டெய்னர் கிடைக்காததால் விலை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் எடுத்து தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு கண்டெய்னர் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

எந்த காரணத்தை கொண்டும் ஆழியாறு, திருமூர்த்தி அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்ல விவசாயிகள் அனுமதிக்க மாட்டோம். எனவே அரசு தலையீட்டு அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் தேங்காய் விலை வீழ்ச்சி, கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவும் தென்னை விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி மத்திய வேளாண் மந்திரியை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்