துணை தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது

விழுப்புரத்தில் லஞ்சம் வாங்கிய வழக்கில் துணை தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது.

Update: 2023-03-20 18:45 GMT

விழுப்புரம் வி.மருதூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 58). இவருக்கு சொந்தமான சொத்துக்கு மதிப்பு சான்று வாங்குவதற்காக கடந்த 2001-ம் ஆண்டு விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வந்த அப்போதைய தலைமையிடத்து துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் என்பவரிடம் விண்ணப்பித்தார். அப்போது சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் ரூ.1000 லஞ்சம் தர வேண்டும் என பாலகிருஷ்ணன் கேட்டுள்ளார். இது குறித்து சண்முகம் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசாரின் அறிவுரையின்படி கடந்த 15.10.2001 அன்று ரசாயன பவுடர் தடவிய பணத்தை சண்முகம் எடுத்து கொண்டு சென்று துணைதாசில்தார் பாலகிருஷ்ணனிடம் கொடுத்தார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கடந்த 24-7-2014 அன்று பாலகிருஷ்ணனை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடை பெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் பாலகிருஷ்ணனின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து அவருக்கு விழுப்புரம்ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை நீதிபதி ஜெயச்சந்திரன் உறுதி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்