தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடும் அவலம்
தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடும் அவலம் தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்;
போடிப்பட்டி,
மடத்துக்குளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி, ஏற்றி வருவதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் பகுதி அமைந்துள்ளது. தாலுகா தலைமையகமாக மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களின் சந்திப்பு பகுதியாகவும் மடத்துக்குளம் உள்ளது. மேலும் தாலுகாஅலுவலகம், நீதி மன்றங்கள், கருவூலம், ரயில் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, வார சந்தை மற்றும் வங்கிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், தினசரி ஏராளமானவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அத்துடன் கிராமப்புறங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மடத்துக்குளம் வந்து, இங்கிருந்து உடுமலை, பழனி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்கின்றனர். இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள மடத்துக்குளம் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றி, இறக்கி விடுகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்வது கட்டாயமாகும். ஆனால் விதிகளை மதிக்காமல் அரசு பஸ்கள் மட்டுமல்லாமல் தனியார் பஸ்களும் வெளியிலேயே பயணிகளை இறக்கி விடுகின்றனர். நகரப் பேருந்துகள் மட்டுமே பஸ் நிலையத்துக்குள் வந்து செல்கின்றன. இதனால் பயணிகள் சாலை ஓரத்திலேயே காத்திருக்கும் நிலை உள்ளது. அதிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என அதிக எண்ணிக்கையில் சாலையின் இருபுறமும் கும்பலாக நிற்கின்றனர்.அதிக அளவில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இவ்வாறு நிற்பது அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால் பொதுமக்கள் சாலையைக் கடப்பதற்கே அஞ்சும் நிலை உள்ளது.அத்துடன் அவ்வப்போது விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே விபத்துக்களைத் தடுக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.விதிகளை மீறும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினார்.