விழுப்புரம் அருகே பலாத்காரம் செய்யப்பட்ட நர்சிங் மாணவி தற்கொலை

விழுப்புரம் அருகே பலாத்காரம் செய்யப்பட்ட நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணமானவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-09-08 00:15 IST

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாணவி, சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார்.

இவர் கடந்த 1-ந் தேதி கல்லூரி விடுதியில் விஷம் குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை விடுதி ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை மாணவி பரிதாபமாக உயிரிழந்தர். பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

உறவினர்கள் சாலை மறியல்

இந்நிலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு 7 மணியளவில் வளவனூர் கடைவீதிக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவியை அதே பகுதியை சேர்ந்த ஒருவர், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துவிட்டு பின்னர் திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்து மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது தற்கொலைக்கு காரணமானவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு மாணவியின் சாவுக்கு காரணமானவரை கைது செய்யும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்றுகூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அந்த நபர், விஷம் குடித்ததாக கூறி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், வளவனூருக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இப்பிரச்சினை குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனை ஏற்ற அவர்கள் அனைவரும் இரவு 9 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்