திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது
அரசியல் கட்சிகள், முழுவீச்சில் தேர்தலுக்கான பணியை தொடங்கி இருக்கின்றன.;
சென்னை,
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. எனவே அடுத்த சட்டசபைக்கான தேர்தலை அடுத்த ஆண்டு (2026) மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது. இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகள், முழுவீச்சில் தேர்தலுக்கான பணியை தொடங்கி இருக்கின்றன.
தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளின் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என நான்கு முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. ஏற்கனவே தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
தேர்தல் பணிகளில் தி.மு.க.வை பொறுத்தவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உடன்பிறப்பே வா' என்று கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த ஜூன் மாதமே தொடங்கி விட்டார். மேலும் தேர்தல் கதாநாயகன் என்று சொல்லப்படும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று கூடுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30-க்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன், வர்த்தகரணி துணைத்தலைவர் அமைச்சர் கோவி.செழியன், சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவ அணி செயலாளர் எழிலன் எம்.எல்.ஏ., சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மகளிர் தொண்டரணி துணை செயலாளர் தமிழரசி ரவிக்குமார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சந்தானம், ‘கனவு தமிழ்நாடு' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுநலச்சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்து தேர்தல் அறிக்கையை தயாரிப்பார்கள். இந்த குழு முதல்-அமைச்சரின் பிறந்தநாளான மார்ச் 1-ந்தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.