இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 22-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
முல்லை பெரியாறு அணையின் உறுதித் தன்மை ஆய்வு: இன்று முதல் 12 நாட்கள் நடக்கிறது
14 ஆண்டுகளுக்கு பின்னர் முல்லை பெரியாறு அணையில் 2-வது முறையாக ஆய்வு நடத்துவதற்காக மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லியில் உள்ள மத்திய மண் மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆர்.ஓ.வி. நீர் மூழ்கி கலம் வரவழைக்கப்பட்டு தமிழக நீர்வளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
ரூ.25 லட்சம் மதிப்பில் நடக்கும் ஆய்வுக்காக சுமார் 7 பேர் கொண்ட வல்லுனர் குழுவுடன், இரு மாநில அதிகாரிகள் முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) அணையில் 250 மீட்டர் நீருக்கு அடியில் அணையின் உட்புறம், முன்புறப்பகுதிகளில் ஆய்வு நடக்க உள்ளது. தினசரி 20 மீட்டர் மட்டுமே ஆய்வு செய்ய முடியும் என்பதால் 12 நாட்கள் வரை இந்த ஆய்வு நடக்க இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள் - முழு விவரம்
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் (TAMIL NADU OPEUNIVERSITY) சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வருகிறது. 2003 - 2004 கல்வி ஆண்டு முதல் இந்த பல்கலைக்கழகம் பல்வேறு நிலையில் கல்வி சேவை செய்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமான படிப்புகளை நடத்தி சாதனை புரிந்து வருகிறது. சுமார் 234 வகையான படிப்புகளை பல்வேறு பாடங்களில் அறிமுகப்படுத்தி அதன் மூலம் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளை மாணவ மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
குறுகிய கால சான்றிதழ் படிப்புகள், விடுமுறை கால டிப்ளமோ படிப்புகள் மற்றும் மேம்பட்ட டிப்ளமோ படிப்புகளை இந்த பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்தியாவில் சுமார் 16 திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் இயங்கி வந்தாலும் அவற்றுள் முறையாக பல்கலைக்கழக மானிய குழுவின் (UNIVERSITY GRANT COMMISSION) 12 B அந்தஸ்தை பெற்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது.
தவெக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா - விஜய் பங்கேற்பு
த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்று காலை 10 மணிக்கு கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த விழாவில் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்
பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (திங்கள் கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாகவும், பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை உயர்வு.... வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்... இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.231-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது. இதன் மூலம் வெள்ளி விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
செவிலியர்கள் போராட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இன்று பேச்சுவார்த்தை
4-வது நாளாக நேற்று செவிலியர்கள் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்ட குழுவினர் இன்று கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம்.. ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?"- நடிகர் சிவராஜ்குமார்
"மக்களுக்கு நல்லது செய்ய நடிகர்களுக்கு, அதிகாரம் அவசியமில்லை. நடிகராக இருந்து கொண்ட நல்லது செய்யலாமே, ஏன் அரசியலுக்கு வரவேண்டும்" என்று சிவராஜ்குமார் கூறியுள்ளார்.