அரசு பள்ளி வகுப்பறை கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது
அரசு பள்ளி வகுப்பறை கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது;
பேராவூரணியில் அரசு பள்ளி வகுப்பறை கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது. உடனடியாக சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கூரை சிமெண்டு காரைகள் இடிந்தது
தஞ்சை மாவட்டம் பழைய பேராவூரணியில் போலீஸ் நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 60 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஒரே ஒரு கட்டிடத்தில் 1-ம் வகுப்பு முதல் 3-வது வகுப்பு வரை இயங்கி வருகிறது. நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் போதிய கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியில் படித்து வருகின்றனர். நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு மாணவர்கள் அமரும் வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுந்தது. மேலும் பக்கவாட்டு சுவர்கள், ஜன்னல்கள் சேதம் அடைந்துள்ளன.
சீரமைக்க வேண்டும்
எனவே பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டு உடனடியாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இடிந்து விழுந்த மேற்கூரைைய சீரமைத்து தர வேண்டும். இல்லையெனில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.