ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-05-05 23:30 GMT

நெகமம்

கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நடத்தையில் சந்தேகம்

கோவை மாவட்டம் நெகமம் அருகே கருமாபுரம் புதூரை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(வயது 35). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சோபனா (33). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2½ வயதில் மகள் உள்ளாள். இதற்கிடையில் சோபனாவுக்கு கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஆனந்தகுமார் ஒரு பெண்ணுடன் அடிக்கடி பேசி வருவதாக கூறி சோபனா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தகராறாக மாறியது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார்.

சப்-கலெக்டர் விசாரணை

இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சோபனா கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், மனவேதனை அடைந்த சோபனா தற்கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனால் பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்