வாலிபர் மர்மச்சாவு

ஆரணி அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் மோட்டார்சைக்கிளுடன் காயங்களுடன் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-24 15:03 GMT

ஆரணி

ஆரணி அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் மோட்டார்சைக்கிளுடன் காயங்களுடன் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் பிணம்

ஆரணியை அடுத்த ஆதனூர் மதுரா விருபாச்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் ராம்குமார் என்ற சத்தியபிரகாஷ் (வயது 30). இவர் வேலையின்றி தந்தையுடன் விவசாய வேலையை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று  இரவு தாய் பேபி அம்மாளிடம் நிலத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு ராம்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து இன்றுஅவரை உறவினர்கள் தேடி சென்றனர். அப்போது நிலத்துக்கு செல்லும் வழியில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் மோட்டார் சைக்கிளுடன் ராம்குமார் காயங்களுடன் கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராம்குமாரை மீட்டு ரத்தினகிரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக ஆரணி தாலுகா போலீசில் குருநாதன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ராம்குமார் மோட்டார்சைக்கிளில் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்யும் நோக்கில் அவரை தாக்கி கிணற்றில் தள்ளினார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்