சமூக ஆர்வலர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி மனைவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி அவரது மனைவி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

Update: 2022-09-14 18:18 GMT

மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும்

கரூர் குப்பம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் கடந்த 10-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது மினி லாரி மோதி பலியானார். இதுகுறித்த புகாரின்பேரில் க.பரமத்தி போலீசார் கொலை வழக்குப்பதிந்து, கல்குவாரி உரிமையாளர் செல்வக்குமார், லாரி டிரைவர் சக்திவேல், ரஞ்சித் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்தநிலையில், ஜெகநாதன் மனைவி ரேவதி நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார்.

அந்த மனுவில், எனது கணவர் ஜெகநாதன் கடந்த 10-ந்தேதி மாலை வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார். எனது கணவரின் உடலை என்னிடம் காட்டாமலும், எந்தவித கையெழுத்தும் பெறாமலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எனது கணவரின் படுகொலை வாகனத்தினால் மட்டும் நிகழவில்லை. சுத்தியல், அரிவாள் மற்றும் கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம். எனவே, எனது கணவரின் உடலை மறுபிரேதப்பரிசோதனை ெசய்தும், அதன் வீடியோ பதிவின் பிரதியை வழங்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சட்டப்படி நடவடிக்ைக ேதவை

கரூர் மாவட்ட குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் முத்து குமார், பொருளாளர் தங்கராஜ் மற்றும் ஜல்லி, எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் ஆகியோரின் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு வந்தனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது:-

கரூர் மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் சட்ட விதிகளுக்குட்பட்டு எங்கள் சங்க உறுப்பினர்களின் கல்குவாரி மற்றும் கிரஷர் தொழில்கள் செய்து வருகிறோம். கல்குவாரியில் இருந்து உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் கரூர் மற்றும் பிற மாவட்டங்கள் முழுவதும் உள்ள அரசு சாலைப்பணி, அரசு கட்டிட பணி மற்றும் இதர அத்தியாவசிய கட்டிட பணி ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் நாங்கள் அனைவரும் அரசுக்கு செலுத்தும் பர்மிட் கட்டணம், சீனியரேஜ் தொகை மற்றும் இதர தொகையால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் சில சமூக விரோதிகளால் குவாரிப்பணி மேற்கொள்ள இடையூறாக உள்ளது. மேலும் எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் பொய்யான புகார்களை மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்தும், எங்களை மிரட்டியும் அச்சுறுத்தியும் வருகின்றனர். இதனால் எங்களால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும், கல் குவாரிகளால் நேரடியாக 5 ஆயிரம் குடும்பங்கள், மறைமுகமாக சுமார் 50 ஆயிரம் குடும்பங்களும் பயனடைந்து வருகிறார்கள். சட்டப்பூர்வமாக தொழில் செய்யும் கல்குவாரிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடு சமூக ஆர்வலர்கள் என்று சொல்பவர்கள் அவதூறு பரப்பி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கல்குவாரி தொழிலுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்