மணிகண்டம் அருகே அடுத்தடுத்த 7 கடைகளில் திருட்டு

மணிகண்டம் அருகே அடுத்தடுத்த 7 கடைகளில் திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-10-22 23:36 IST

மணிகண்டம் அருகே அடுத்தடுத்த 7 கடைகளில் திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோழிக்கடை

மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் (வயது 50) என்பவர் கோழிக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வழக்கம்போல் சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கடையை திறக்க வந்தார்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாபெட்டியில் இருந்து ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இதேபோல் அருகே உள்ள மற்ற கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.இது குறித்த தகவலின்பேரில் கடைகளின் உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது அங்கு ஜான்சன் என்பவரது கம்ப்யூட்டர் மையத்தில் விலை உயர்ந்த லேப்டாப் திருடு போயிருந்தது. அதேபோல ஜான் என்பவரது மளிகை கடையில் ரூ.4 ஆயிரம் மற்றும் சில பொருட்கள், ஐயப்பன் என்பவரது மருந்து கடையில் ரூ.2,500 திருட்டு போய் இருந்தது. மேலும் அங்கு இருந்த அரிசி கடை, ஜவுளிக்கடை, டீக்கடை உள்ளிட்ட 7 கடைகளில் திருட்டு நடந்துள்ளது.

வலைவீச்சு

இது குறித்த தகவல் அறிந்த நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், மணிகண்டம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் அங்குள்ள கடைகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் டிப்டாப்பாக பேண்ட், சட்டை அணிந்து கொண்டு நள்ளிரவு 1 மணியளவில் அங்கு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்