மளிகை கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.58 ஆயிரம் திருட்டு

கம்பத்தில், மளிகை கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர் அங்கிருந்த ரூ.58 ஆயிரம் மற்றும் 10 செல்போன்களை திருடி சென்றார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-09-15 22:15 GMT

கடையில் திருட்டு

கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 41). இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் அங்கு செல்போன்களும் பழுது நீக்கம் செய்து தரப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இவர், வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கல்லாவில் இருந்த ரூ.58 ஆயிரம் மற்றும் பழுது நீக்குவதற்காக வைத்திருந்த 10 செல்போன்கள் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து முருகன், கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

பின்னர் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்தனர். அவர்கள் அந்த கடையில் பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் பைரவ் வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த கடையில் இருந்து மாரியம்மன் கோவில், வரதராஜபுரம் தெரு வழியாக காந்தி சிலை வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை, இதற்கிடையே கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், முக கவசம் அணிந்த நபர் ஒருவர் பின்னால் உள்ள கோவில் வழியாக ஏறி கடையின் மேற்கூரை பிரித்து உள்ளே இறங்கி திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். கடையின் மேற்கூரையை பிரித்து பணம், செல்போனை மர்ம நபர் திருடி சென்ற துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்