லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகை -அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தி பயணிகள் இறங்கியதால் பரபரப்பு

சென்னை நோக்கி வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகை வந்ததால் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.;

Update:2023-03-22 01:11 IST

ஜோலார்பேட்டை,

சென்னை நோக்கி வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகை வந்ததால் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

திடீர் தீ

பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12608) நேற்று காலை 8.40 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை வந்தடைந்தது. ஓரிரு நிமிடத்தில் புறப்பட்ட அந்த ரெயில் ஆம்பூரை கடந்து வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.

குடியாத்தம் அருகே வளத்தூர் ரெயில் நிலையத்தை கடந்தபோது முன்பதிவு செய்யப்பட்ட டி-9 பெட்டியில் திடீரென புகை வந்ததை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ரெயிலில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ரெயில் அந்த இடத்தில் நிற்கவே பயணிகள் அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக ரெயில் என்ஜின் பைலட் கீழே இறங்கி வந்தபோது டி-9 பெட்டியில் இருந்து புகை வந்ததை அறிந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக வளத்தூர் ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் மெக்கானிக், எலக்ட்ரிக்கல் பிரிவு ஊழியர்கள் அங்கு வந்தனர்.

அப்போது ரெயிலின் சக்கரம் பிரேக் ஆகி உராய்வு ஏற்பட்டதால் புகை வந்ததை கண்டுபிடித்து அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தாமதம்

இதனையடுத்து பழுது சரிசெய்யப்பட்டதும் மீண்டும் ரெயிலில் பயணிகள் ஏறினர். அதன்பின் 20 நிமிடம் தாமதமாக காட்பாடி நோக்கி புறப்பட்டது.

காட்பாடி ரெயில் நிலையத்திற்கு 9.50-க்கு செல்ல வேண்டிய லால் பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் 24 நிமிடம் தாமதமாக 10.14-க்கு சென்றடைந்தது.

அதனை தொடர்ந்து ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்