'என்னை தற்கொலை செய்ய தூண்டுகிறார்கள்':பெரியகுளம் பெண் போலீஸ் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு

தன்னை தற்கொலைக்கு தூண்டுவதாக பெரியகுளம் பெண் போலீஸ் வெளியிட்ட ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-09-09 18:45 GMT

பெண் போலீஸ்

தேனி மாவட்டம் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் பேசுவதாக ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் அந்த பெண் போலீஸ் கூறியிருப்பதாவது:-

எனக்கு 29-7-2020-ல் ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்து 3 ஆண்டுகள் ஆகியும் எனக்கு முதல் தகவல் அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

நானும், எனது உடைந்த காலை வைத்துக் கொண்டு பலமுறை மனு கொடுத்துள்ளேன். இதுவரை எனக்கு விபத்து காப்பீட்டுக்குரிய எந்த நிதிஉதவியும் கிடைக்கவில்லை. நான் பலமுறை முயற்சி செய்தும் தோல்வி தான் அடைந்து வருகிறேன்.

தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்

கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த ஜூலை 7-ந்தேதி அதிகாலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னும் மறையவில்லை. என்னையும் தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு என் மீதும் பல புகார் சமர்ப்பித்து என்னை தற்கொலை செய்ய தூண்டுகிறார்கள். எனக்கு ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது. அவர்களை வைத்துக் கொண்டு நான் பெரும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனக்கு வந்த அவல நிலை இனி எந்த காவலருக்கும் வரக்கூடாது.

போலீஸ் துறையில் இன்னொரு உயிரும் போகக்கூடாது என்பதற்காக இதை முதல்-அமைச்சருக்கு சமர்ப்பிக்கிறேன். மேலும், வார விடுமுறையும் கிடைப்பது இல்லை. தற்செயல் விடுப்பும் கிடைப்பது இல்லை.

இவ்வாறு அந்த ஆடியோவில் பேசி இருக்கிறார்.

சர்ச்சை தகவல்

மேலும் அந்த ஆடியோவில், டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய தகவலையும் சொல்லி இருக்கிறார். இது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சம்பந்தப்பட்ட பெண் காவலர் கடந்த 5, 6-ந்தேதிகளில் பணிக்கு வரவில்லை. தன்னிச்சையாக விடுப்பு எடுத்தது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. பணிக்கு சரியாக வருவது கிடையாது. அவர் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்ந்தவர். இந்த ஆடியோ குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்