மொபட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

Update:2023-06-14 22:08 IST


காங்கயம் அருகே சாலையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மொபட்டில் சென்ற பெண்

காங்கயம் அருகே உள்ள பரஞ்சேர்வழி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பானுபிரியா (வயது 25).

இந்த நிலையில் பானுபிரியா நேற்று மாலை காங்கயம் கடைவீதிக்கு சென்று விட்டு பின்னர் மீண்டும் தனது வீட்டை நோக்கி காங்கயம் - சென்னிமலை சாலையில் தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அவருடன் அவரது உறவினரான சத்யா என்பவருடன் வந்தார்.

மொபட்டை சத்யா ஒட்டிவந்தார். பானுபிரியா பின்னால் அமர்ந்து இருந்தார். அப்போது பானுபிரியாவை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 நபர்கள் வந்தனர்.

5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

சென்னிமலை சாலை, நால்ரோடு அருகே வந்தபோது திடீரென்று அந்த 2 நபர்களும் பானுபிரியா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். பதறிப்போன பானுபிரியாவிற்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்.

இதுகுறித்து காங்கயம் போலீஸ் நிலையத்தில் பானுபிரியா புகார் அளித்தார். அதன் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச்சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் பீதி

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கயம் அருகே பகல் நேரத்தில் சாலையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 2 மர்ம நபர்கள் 5 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கயம் பகுதியில் இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்