ஊரக வேலை திட்டத்தில் ஆண்டு முழுவதும் பணி வழங்க நடவடிக்கை

மத்திய அரசின் ஊரக வேலை திட்டத்தை விரிவுபடுத்தி ஆண்டு முழுவதும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல் தெரிவித்தார்.

Update: 2022-11-04 18:45 GMT

மத்திய அரசின் ஊரக வேலை திட்டத்தை விரிவுபடுத்தி ஆண்டு முழுவதும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல் தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டம்

ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை மூலம் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மத்திய மந்திரி ஆய்வு செய்ததுடன், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் பிரதமர் மீன்வளர்ப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

365 நாட்களும் வேலை

இதை தொடர்ந்து மத்திய மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

​ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை வளர்ச்சி திட்ட பணிகளில் கவனம் செலுத்தவும், குடிநீர் தேவையை நிறைவேற்றவும் மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை தனி கவனம் எடுத்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் நீர் ஆதாரங்களை கண்டறிந்து பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு தண்ணீர் வழங்கும் பணிகள் நடைபெறுகிறது.இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கிராம பகுதியில் அனைவருக்கும் வேலை வாய்ப்பினை உருவாக்கவும், 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ஆண்டு முழுவதும் 365 நாட்களும் வேலை வழங்கிடவும் தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட பா.ஜ.க. தலைவர் கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜாசேகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக்மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்