மழைநீர் தேங்கும் வகையில் கிடந்த டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது

திண்டுக்கல்லில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் வகையில் கிடந்த டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-09-24 01:00 GMT

மழைக்காலத்தில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களில் டெங்கு காய்ச்சலும் ஒன்றாகும். திறந்தவெளியில் கிடக்கும் டயர்கள், தொட்டி, பானை, பாட்டில், இளநீர் கூடு உள்ளிட்ட பொருட்களில் தேங்கும் மழைநீரில் ஏடிஸ் கொசுக்கள் உருவாகின்றன. இந்த கொசுக்கள் டெங்கு காய்ச்சலை பரப்புகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்தான். மேலும் ஒருசில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு காணப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி அரசு உத்தரவிட்டது.

இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் பூங்கொடி உத்தரவின்பேரில் டெங்கு தடுப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் உள்ளாட்சி அமைப்புகளில் கொசு ஒழிப்பு, மழைநீர் தேங்குமாறு கிடக்கும் பொருட்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் நகர்நல அலுவலர் செபாஸ்டியன், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், கீதா, முகமதுஅனிபா, சீனிவாசன், மலேரியா பணியாளர்கள் திண்டுக்கல் நகரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் திண்டுக்கல்-பழனி சாலையில் பழைய டயர் கடைகளில் மழைநீர் தேங்கும் வகையில் திறந்தவெளியில் டயர்கள் கிடப்பதை பார்த்தனர். இதையடுத்து 12 கடைகளில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 100 டயர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்காரர்களை எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்