பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

யானைகள் நடமாட்டம் எதிரொலியாக பேரிஜம்ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-03-09 21:59 IST

பேரிஜம் ஏரி

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பேரிஜம் ஏரி உள்ளது. நன்னீர் ஏரியான இங்கிருந்து பெரியகுளம் நகருக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த ஏரி பகுதிக்கு செல்லும் வழியில் மதிகெட்டான் சோலை, பேரிஜம் ஏரி வியூ, தொப்பி தூக்கிபாறை உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடங்களுக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் வனத்துறை அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும்.

அடர்ந்து படர்ந்த வனப்பகுதியான இங்கு வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இதைக்கருத்தில் கொண்டு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரி பகுதிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் ஏரி பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதன் எதிரொலியாக அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், யானைகள் நடமாட்டம் காரணமாக பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு நேற்று காலை முதல் அனுமதி ரத்து செய்யப்படுகிறது. யானைகள் அந்த இடத்தை விட்டு, வேறு இடங்களுக்கு சென்ற பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்