வாரச்சந்தை நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் வியாபாரிகள் மனு

திருச்சி மாநகரில் வார சந்தை நடத்த அனுமதி கேட்டு வியாபாரிகள் மனு கொடுத்தனர். பட்டா கேட்டு பொதுமக்கள் தர்ணா செய்தனர்.;

Update:2023-09-26 02:28 IST

திருச்சி மாநகரில் வார சந்தை நடத்த அனுமதி கேட்டு வியாபாரிகள் மனு கொடுத்தனர். பட்டா கேட்டு பொதுமக்கள் தர்ணா செய்தனர்.

வியாபாரிகள் மனு

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர்.

திருச்சி கலைஞர் வார ச்சந்தை தரைக்கடை வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சேர்ந்து 3 ஆண்டுகளாக கலைஞர் வாரச்சந்தை என்ற பெயரில் வரத்துக்கார தெரு மற்றும் 80 அடி ரோட்டில் நடத்தி வருகிறோம். தற்போது மாநகராட்சி வாரச்சந்தை நடத்த அனுமதி அளிப்பதில்லை. இதனால் அனைவரும் வியாபாரம் இன்றி தவித்து வருகிறோம். இதற்கு உடனே தீர்வு கண்டு வாரச்சந்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தரையில் அமர்ந்து தர்ணா

திருச்சி தென்னூர் குத்பிஷாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க வந்தனர். அப்போது கணினியில் சர்வர் பிரச்சினை என்பதால் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். இதைத்தொடர்ந்து, மனுக்களை மொத்தமாக வாங்கி கலெக்டரிடம் கொடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பளம் இல்லை

திருச்சி அல்லூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் நவநீதன் கொடுத்த மனுவில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை நம்பி தான் கிராமப்புற ஏழை எளிய மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் 8 வாரங்கள் சம்பளம் கிடைக்காததால் அவர்கள் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு தடையின்றி சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மணப்பாறை முத்தப்புடையான் பட்டி பொதுமக்கள் கொடுத்த மனுவில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுத்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்