நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

திருமுருகன்பூண்டியில் குடிநீர் இணைப்பு துண்டித்ததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-11 16:22 GMT

முற்றுகை

திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் முறைகேடாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு அந்த இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருமுருகன்பூண்டி 19-வது வார்டு கானக்காடுதோட்டம் பகுதியில் திருநங்கைகள் வசிக்கும் குடியிருப்பு அருகே இருந்த குடிநீர் இணைப்பை நகராட்சி நிர்வாகம் முறைகேடாக வழங்கப்பட்ட இணைப்பு என்று கூறி துண்டிப்பு செய்தது.

இந்த குடிநீர் இணைப்பு துண்டித்ததை கண்டித்து அப்பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அனைவரும் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி கமிஷனர் அப்துல் ஹாரீஸை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது கடந்த 8 ஆண்டுகளாக எங்களது பயன்பாட்டிற்கு உரிய குடிநீர் இணைப்பை எப்படி துண்டிக்கலாம்? என்றும், உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறி கமிஷனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது முன்னாள் தலைவரும், 11-வது வார்டு கவுன்சிலருமான லதாசேகர் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள், நிர்வாகிகள் ஆகியோரும் திருநங்கைகளுக்கு ஆதரவாக கமிஷனரிடம் முறையிட்டனர். அப்போது கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே கலெக்டரின் அனுமதியுடன் வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பை திருநங்கைகள் பயன்படுத்தி வரும் நிலையில், முறைகேடான இணைப்பு என்று கூறி எப்படி துண்டிப்பது என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு மீண்டும் வழங்கப்படும் என்று கமிஷனர் உறுதியளித்தார். இதன் பின்னரே திருநங்கைகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்