மலை ரெயில் டீசல் என்ஜின் பொன்மலைக்கு அனுப்பி வைப்பு

மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் டீசல் என்ஜின் பொன்மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.;

Update:2022-05-19 23:34 IST

மேட்டுப்பாளையம்,மே.20-

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் பழுதுபார்க்கும் பணிக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டு வந்த மலைரெயில் டீசல் என்ஜின் பழுதுபார்க்கும் பணிக்காக மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.


தொடர்ந்து டீசல் என்ஜினை பி.ஆர்.எப்.வேகனில் ஏற்றுவதற்காக சேலம் ரெயில்வே கோட்டம் ஈரோட்டில் இருந்து 140 டன் எடை கொண்ட ராஜாளி கிரேன் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அதன் பின்னர் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை பொறியாளர்கள் ரஞ்சித் குமார், சதீஷ்குமார,் பிரேம்குமார் ஆகியோர் மேற்பார்வையில் கிரேன் இயக்கப்பட்டது.


ரயில்வே தொழிலாளர்கள் டீசல் என்ஜினை பத்திரமாக பி.எப்.ஆர்.வேகனில் ஏற்றினர். பின்னர் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் ஒரு மணிக்கு தொடங்கிய பணி மாலை 4.30 மணிக்கு முடிவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்