தூத்துக்குடிகலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-13 18:45 GMT

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

பொங்கல் விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் அனைத்து சமத்துவ புரங்களிலும் சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட வேண்டும், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தி கொண்டாட வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலும் சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதே போன்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். இதில் கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி சமத்துவபுரத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு பேசினார்.

நூலகம்

அப்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதவியேற்றவுடன் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் கொண்டு வர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அனைத்து சமத்துவபுரங்களில் உள்ள வீடுகளும் புணரமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 சமத்துவ புரங்களில் அனைத்து வீடுகளும் முழுமையாக சீரமைக்கப்பட்ட முதல் சமத்துவபுரம் பேரூரணிதான். கிராமங்களில் அதிகமான மரங்கள் வளர்க்க வேண்டும். அடுத்த 2 வருடங்களில் அதிக மரங்கள் இருக்கும் கிராமமாக பேரூரணியை மாற்ற வேண்டும். திம்மராஜபுரம் பஞ்சாயத்தில் புதிய பஞ்சாயத்து அலுவலக கட்டிடம், பள்ளி கட்டிடம் ஆகியவை விரைவில் கட்டப்படும்.

பொதுநிகழ்ச்சிகளில் சால்வை அணிவிக்காமல் புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும். புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாம். சிறு குழந்தைகளுக்கு புத்தகங்களை படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். சமத்துவபுரத்திலும் சிறிய நூலகம் அமைக்க வேண்டும். சமத்துவபுரத்தில் அங்கன்வாடி கட்டிடம் வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு உள்ளது. உங்களது கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அ.பிரம்மசக்தி, தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்