உலர வைக்க முடியாமல் தென்னை மஞ்சி தேக்கம்

நெகமம் பகுதியில் தொடர் மழையால் உலர வைக்க முடியாமல் தென்னை மஞ்சி தேக்கம் அடைந்து உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலையில் இருக்கின்றனர்.;

Update:2022-07-17 18:57 IST

நெகமம்

நெகமம் பகுதியில் தொடர் மழையால் உலர வைக்க முடியாமல் தென்னை மஞ்சி தேக்கம் அடைந்து உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலையில் இருக்கின்றனர்.

தென்னை சாகுபடி

நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதிகளவில் தென்னை சார்ந்த தொழில்களும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தென்னை நார் உற்பத்தியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருகின்றன. இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

பச்சை மட்டையில் இருந்து வெள்ளை நிற நாரும், காய்ந்த மட்டையில் இருந்து கருப்பு நிற நாரும் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பெரும்பாலான நாரை கொண்டு கயிறு உற்பத்தி செய்து, கேரளாவுக்கும், சீனாவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

வேலையின்றி தவிப்பு

கயிறு உற்பத்திக்கு மட்டையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் மஞ்சி நாரை வெயிலில் உலர வைப்பது அவசியமாகிறது. அதாவது தென்னை நாரை வெயிலில் நன்றாக உலர வைத்தால்தான், அதன் தரம் மிகுதியாக இருக்கும்.

இந்த நிலையில் நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு, பகல் என தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்னை நார் மஞ்சியை உலர வைக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் தென்னை நார் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மஞ்சி தேக்கம் அடைந்து உள்ளதோடு தொழிலாளர்களும் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

உற்பத்தி பாதிப்பு

இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

மட்டையில் இருந்து நாரை பிரித்த பிறகு மஞ்சியை வெயிலில் உலர வைப்பது வழக்கம். இவ்வாறு நன்கு உலரும் நாரை கொண்டு கயிறு உற்பத்தி செய்து, பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வருகிறோம்.

ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி கோவை மாவட்டம் முழுவதும் பெய்து வருகிறது. இதன் காரணமாக நார் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதோடு தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உள்ளது. மேலும் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப தொடங்க தயாராகி வருகின்றனர். இதனால் உற்பத்தி மேலும் பாதிக்கப்படலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்