திமுக-வின் சாதனைகளை பொறுக்க முடியாத சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்: முதல் அமைச்சர் பேச்சு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

Update: 2022-12-04 04:12 GMT

 சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு இன்று இலவச திருமணம் செய்துவைக்கப்பட்டது. திருவாண்மியூரில் வைத்து நடைபெறும் இந்த திருமன நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

31 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததுடன், 30 சீர்வரிசைப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார். திருமண விழாவிற்கு பின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்றுள்ள இந்த திருமண விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமைச்சர் சேகர் பாபு ஒரு செயல் பாபு என பல இடங்களில் நான் தெரிவித்துள்ளேன்.

அமைச்சர்களை முதலமைச்சர் வேலை வாங்குவதை பார்த்து இருக்கிறோம், ஆனால் முதல்வரை வேலைவாங்க கூடியவராக அமைச்சர் சேகர் பாபு இருக்கிறார் கோவில்களில் அர்ச்சனையை தமிழ் மொழியில் மேற்கொள்ள செய்துள்ளோம். அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமனங்களை செய்துள்ளோம். பல கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்களை மீட்டுள்ளோம்.

சமத்துவத்தை விரும்பாத சில சக்திகள் மூலமாக எத்தனை தடைகள் வந்தாலும், தொடர்ந்து அதற்கான சட்ட போராட்டத்தையும் நடத்திக்கொண்டிருக்கின்றோம். இச்சாதனைகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் செய்துள்ளோம்.

இதையெல்லாம் குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அதனால் தான் அவர்கள் பொய், பித்தலாட்டத்தை பரப்பிக்கொண்டிருக்கின்றனர். அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் தான் மதத்தை வைத்து பழிகளையும், குற்றங்களையும், பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.

அனைவருக்குமான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஏழையில் சிரிப்பில் இறைவனை கான்பவர்கள் நாம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற முறையில் நாம் பணிகளை செய்துவருகிறோம். அதன் அடையாளம் தான் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 31 இணையர்களுக்கு மணவிழாவை நாம் நடத்திமுடித்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்