அம்மன் கோவில்களில் வரலட்சுமி பூஜை

கரூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று வரலட்சுமி பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;

Update:2022-08-06 00:24 IST

வரலட்சுமி பூஜை

ஆடி மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி பூைஜயையொட்டி கரூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கோவிலின் முன்புறம் உப்பு வைத்து தீபம் ஏற்றியும், சூடம் ஏற்றியும் பயபக்தியுடன் வழிபாடு நடத்தினர். பின்னர் கோவிலின் முன்பு பக்தர்கள் சார்பில் கூழ், பொங்கல் மற்றும் சுண்டல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன.இதைப்போல கரூர் பசுபதிபுரம் வேம்பு மாரியம்மன்வரலட்சுமி அலங்கரத் திலும்,தாந்தோணிமலை முத்துமாரியம்மன் வளையல் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

நொய்யல்

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி 3-வது வெள்ளி மற்றும் வரலட்சுமி பூஜையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் சேமங்கி, நொய்யல், அத்திப்பாளையம், உப்பு பாளையம் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் அருகே நாணப்பரப்பில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் தளவாபாளையத்தில் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி 3-வது வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்