மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கிராம நிர்வாக அலுவலர் சாவு

கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கிராம நிர்வாக அலுவலர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-09-22 22:33 IST

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கிராம நிர்வாக அலுவலர் பரிதாபமாக இறந்தார்.

கிராம நிர்வாக அலுவலர்

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா மேல்செங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). இவருக்கு லலிதா (31) என்ற மனைவியும், அகிலன் (9), பிரதீப் (7) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

பிரபாகரன் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தெள்ளாருக்கு மாறுதலாகி அங்கு கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் இன்று பணி நிமித்தம் காரணமாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பிரபாகரன் தெள்ளாரில் இருந்து திருவண்ணாமலைக்கு கீழ்பென்னாத்தூர் வழியாக வந்து கொண்டிருந்தார்.

கார் மோதி பலி

அப்போது திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பிரபாகரனை மீட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை விபத்து ஏற்படுத்தய காரிலேயே திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசில் லலிதா புகார் செய்தார்.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்