கரணம் தப்பினால் மரணம்:மரக்கன்றுகளை காப்பாற்ற உயிரை பணயம் வைக்கும் கிராமத்து பெண்கள்100 அடி ஆழ கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுத்து வருகிறார்கள்

மரக்கன்றுகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து, 100 அடி ஆழ கிணற்றுக்குள் இறங்கி பெண்கள் தண்ணீர் எடுத்து வருகிறார்கள்;

Update:2023-05-12 00:15 IST


விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்துக்கு உட்பட்டது கொசப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் தனிநபர் ஒருவர் சுமார் 25 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருந்தார். இதை சமீபத்தில் அரசு மீட்டது. மீட்கப்பட்ட இடத்தில் தேக்கு, பலா, மாமரம் என்று சுமார் 2500 மரக்கன்றுகளை நட்டனர்.

ஆனால், இதற்கு தண்ணீர் வசதி ஏதும் இல்லை. இதையடுத்து, ஊராட்சியில் இருந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புதிட்டத்தின் கீழ், மரக்கன்றுகளை காப்பாற்ற ஏற்பாடு செய்தனர்.

மரக்கன்றுகளை காப்பாற்றுவது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், அதற்காக தண்ணீர் எடுக்க செல்லும் இடம் தான் ஆபத்தானதாக அமைந்து இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் சுமார் 100 அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை சேர்ந்த பெண்கள் குடத்துடன் இறங்கி தண்ணீர் எடுத்து வருவதுதான் அனைவரது மனதையும் உலுக்குவதாக உள்ளது.

ஒரு குடம் தண்ணீருக்கு...

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், கிணற்றுக்குள் இருக்கும் படிக்கட்டில் பெண்கள் வரிசையாக நின்று கொண்டு, தண்ணீர் குடத்தை ஒருவருக்கொருவர் மாற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.

ஒரு குடம் தண்ணீரை கரைக்கு கொண்டு வருவதற்கு சுமார் 10 பெண்கள் தங்களது உயிரை பணயம் வைக்கிறார்கள் என்பது தான் வேதனையின் உச்சம். கோடையில் மரக்கன்றுகளை காக்க வேண்டும் என்ற முயற்சி பாராட்டத்தக்கது ஆனால், இத்தகைய விபரீதம் தான் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக பார்க்கப்படுகிறது.

மாற்று நடவடிக்கை தேவை

எனவே தமிழக அரசு இதற்கு மாற்று நடவடிக்கையாக, அந்த பகுதியில் போர்வெல் மற்றும் மோட்டார் அமைத்து, அதன் மூலம் இத்திட்ட பெண்களை கொண்டு மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும். இதன் மூலம் அவர்களது பணி சார்ந்த அச்சம் விலகுவதுடன், பணியும் சற்று எளிதாகும் என்பதே அவர்களது எண்ணமாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்