கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேற முயற்சி

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-01 20:00 GMT

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியேறும் போராட்டம்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பூமிரெட்டிப்பட்டி அருந்ததியர் காலனியில் 50 குடும்பங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் நேற்று தங்களது குழந்தைகளுடன் பாய், தலையணை, குடம், அரிசி உள்ளிட்ட பொருட்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடியேறும் போராட்டத்திற்கு வந்தனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு வீட்டுமனை பட்டா கேட்டு பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

பட்டா வழங்க கோரிக்கை

இதுகுறித்து பூமிரெட்டிப்பட்டி கிராம மக்கள் கூறுகையில், பெரியசோரகை அருகே பூமிரெட்டிப்பட்டி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஏற்கனவே அரசு வழங்கிய வீட்டில் 3 குடும்பங்கள் ஒன்றாக வசித்து வருகிறோம். இதனால் வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தோம்.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் பட்டா வழங்க பெரியசோரகை பகுதியில் நில அளவீடு செய்ய வந்தனர். அப்போது, வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் பட்டா வழங்கக்கூடாது என வாக்குவாதம் செய்தனர். இதனால் வேறு இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை.

வாழ வழியில்லை...

கடந்த 2 நாட்களுக்கு முன்பு எங்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோது, குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் எங்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என்றும், மீறி வழங்கினால் வாழ விடமாட்டோம் என்று தெரிவித்தனர்.

இதனால் வாழ வழியில்லாமல் கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்துள்ளோம். எனவே, எங்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்