இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு - மத்திய மந்திரிக்கு தமிழக முதல்-அமைச்சர் கடிதம்

வழிமுறைகள் மூலம் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;

Update:2026-01-03 16:57 IST

சென்னை,

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்கவும், இலங்கைக் காவலில் இருக்கும் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்யவும், உரிய தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை மீனவ கிராமத்தில் இருந்து 9 மீனவர்கள் இரண்டு மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 02.01.2026 அன்றிரவு இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புத்தாண்டின் தொடக்கத்திலேயே நடைபெற்றுள்ள இச்சம்பவம், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் அவல நிலையை மீண்டும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் இதுபோன்று தொடர்ந்து கைது செய்வதும், அவர்களது மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதும் தடையின்றி நடைபெறுவது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும் என்று குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 73 மீனவர்களும், 251 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் காவலில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தொடர்ச்சியான கைது சம்பவங்கள், தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களிடையே பெருத்த இன்னல்களையும், பதட்டத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் இனிமேல் நடைபெறுவதை தடுக்கவும், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திடவும், மத்திய அரசு உரிய தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரிடம் தனது கடிதம் மூலம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்