அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சுற்றுப்பயணம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க.வின் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்கும் குழுவின் சுற்றுப்பயணம் வருகிற 7.1.2026 முதல் 20.1.2026 வரை நடைபெற உள்ளது.;

Update:2026-01-03 17:38 IST

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் மண்டலம் வாரியாகச் சென்று பொதுமக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெறுவதற்கான சுற்றுப் பயணத் திட்டமானது வருகிற 7.1.2026 முதல் 20.1.2026 வரை நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 17-வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தேர்தல் என்றாலும், மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை; எதிர்கால தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை உள்ளடக்கியதாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கைகள் இருந்திருக்கின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களின் நலனையும், முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில், பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து தரவுகளை சேகரித்து, ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கையினை தயாரிக்கும் பொருட்டு, 'தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர்' தமிழ்நாடு முழுவதும், வருகின்ற 7.1.2026 முதல் 29.1.2026 வரை, பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 9 மண்டலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் மண்டலம் வாரியான சுற்றுப் பயண விபரமானது, வரிசை எண், சுற்றுப்பயண தேதி மற்றும் கிழமை, நேரம், கருத்துகளைப் பெறும் இடங்கள், பங்குபெறும் வருவாய் மாவட்டங்கள் என்று பின்வருமாறு உள்ளது:

1. 7.1.2026, புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள். மாலை 4 மணிக்கு சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள்.

2. 8.1.2026, வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள். மாலை 4 மணிக்கு திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள்.

3. 9.1.2026, வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் மண்டலத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள். மாலை 4 மணிக்கு சிவகங்கை மண்டலத்திற்கு உட்பட்ட விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள்.

4. 11.1.2026, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள். மாலை 5 மணிக்கு திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள்.

5. 19.1.2026, திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள்.

6. 20.1.2026, செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணிக்கு சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள்.

மேற்சொன்னவாறு, மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்களுக்குள் கலந்து ஆலோசித்து, கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு வருகை தந்து பொதுமக்களின் கருத்துகளைப் பெறும் வகையில், அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திட வேண்டும் என்றும்; கூட்டம் நடைபெறுவதற்கான மண்டபத்தை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர் முன்பதிவு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் வரும்போது, மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களும், நிர்வாகிகளும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைத்தறி மற்றும் நெசவுத் தொழிலாளர்கள், மோட்டார் தொழிலாளர்கள், மீனவர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ரெயில்வே தொழிற்சங்கங்கள், தொழில் முதலீட்டாளர்கள், சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள், வணிகர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொதுநலச் சங்கங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மாணவர்கள், பொதுநலன் சார்ந்த அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களிடமும், அவர்களுடைய தேவைகள், எதிர்பார்ப்புகள் எவை எவை என்று, நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ, குழுவினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்