ஓய்வூதிய திட்டம்: முதல்-அமைச்சர் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி

தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் அனைத்து ஒப்பந்த பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பையும் முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-03 18:08 IST

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து கடந்த 1.4.2003 முதல் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. அதேசமயம் இதனை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கடந்த 22 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். மேலும் வருகிற 6-ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்" எனும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் காக்கும் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது வரவேற்கக்கூடியதே. குறிப்பாக மாநில அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறும் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பதையும், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியும் வழங்கப்படும் என்பதையும் அரசு ஊழியர்கள் வரவேற்று மகிழ்கின்றனர். தமிழ்நாடு அரசில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் சார்பில் இதனை நானும் வரவேற்கிறேன்.

அதேசமயம் நிதிக்குழு பரிந்துரையின்படி ஊதியம் உயர்த்தப்படுவதைப் போல ஓய்வூதியமும் உயர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் நிதிக்குழு அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பலன் பெற முடியும். இதனை தமிழ்நாடு முதல்-அமைச்சர் கவனத்தில் கொண்டு வருகிற சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல் கல்வித்துறை, வேளாண்மை துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள், காலமுறை ஊதியர்கள், தொகுப்பூதியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பையும் முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அரசு துறைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் சமமானவர்கள், சமவேலைக்கு சமஊதியம் பெறுபவர்கள் என்கிற சமத்துவ, சமூகநீதி உறுதிப்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, விடுபட்ட கோரிக்கைகள் நிறைவேற்றவும், நிரந்தர பணியில் இல்லாத ஊழியர்கள் அனைவரின் நலன் காக்கும் அறிவிப்புகளை முதல்-அமைச்சர் வெளியிடவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்