போலீசார் கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

திண்டுக்கல் அருகே போலீசாரை கண்டித்து கிராம மக்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-02 18:09 GMT

திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு அருகே உள்ள கோம்பை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் கஸ்பர் (வயது 35). விவசாயி. இவர், பயிர்சாகுபடிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக திண்டுக்கல்லுக்கு வந்தார். பின்னர் பொருட்களை வாங்கிக்கொண்டு கோம்பைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றுகொண்டிருந்தார். அப்போது ஏ. வெள்ளோடு அருகே அவரை சிலர் வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஸ்டீபன் கஸ்பர், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்டீபன் கஸ்பர் கொடுத்த புகாரின் பேரில், அம்பாத்துரை போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திண்டுக்கல் வடக்கு போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்