நாடு முழுவதும் விமானத்தில் லேசர் ஒளி அடித்ததாக 534 சம்பவங்கள் பதிவு

நாடு முழுவதும் விமானத்தில் லேசர் ஒளி அடித்ததாக 534 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.;

Update:2025-12-19 10:46 IST

சென்னை,

ஆகாயத்தில் பயணிகளை சுமந்து செல்லும் வெள்ளை காகம் என்று அழைக்கப்படும் விமானம் இரவு நேரங்களில் தரையிறங்குவதற்காக தாழ்வாக பறக்கும்போது அதன்மீது லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருகிறது.

விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் சிறுவர்கள், இளைஞர்கள் விளையாட்டுத்தனமாக லேசர் ஒளியை தவறுதலாக பயன்படுத்தி வருகின்றனர். லேசர் ஒளியை நேருக்கு நேராக பார்ப்பதால் விமானிக்கு தற்காலிக பார்வை இழப்பு ஏற்பட்டு, விமானத்தை பத்திரமாக ஓடுபாதையில் இறக்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.

மேலும் நிலை தடுமாறி ஓடுபாதையை விட்டு விலகி தரையிறக்கும் அபாயத்தையும் உண்டாக்கும். இதனால் விபத்து ஏற்பட்டு, விலை மதிப்பற்ற உயிர்களுக்கு ஆபத்து நேரிடவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், விமானம் தரையிறங்கும்போது அதன் மீது லேசர் ஒளி அடித்ததாக நாடு முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு 3 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது 2023-ம் ஆண்டு 16 ஆகவும், 2024-ம் ஆண்டு 548 ஆகவும், நடப்பாண்டு நவம்பர் மாதம் நிலவரப்படி 534 ஆகவும் உள்ளது.

இந்த ஆண்டில் அதிகபட்சமாக டெல்லி விமான நிலையத்தில் 105 சம்பவங்கள் பதிவாகி இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 67 சம்பவங்களும், நடப்பாண்டு 54 சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. இதேபோல கோவை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 8-ம், நடப்பாண்டு 8-ம், மதுரை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 6-ம், இந்த ஆண்டு 4-ம், திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 5-ம், நடப்பாண்டு 2-ம் என விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் விமானத்தின் மீது லேசர் ஒளி அடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்