கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் திடீர் முற்றுகை

பஞ்சமி நிலத்தை மீட்டு தரக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்ட கிராமமக்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தததால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2022-05-30 17:01 GMT

கள்ளக்குறிச்சி

2 ஆயிரம் ஏக்கர் நிலம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் வேறு சமூகத்தினரிடம் உள்ளதாகவும், இதனை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மற்றும் கிராமமக்கள் கடந்த 20 ஆண்டுகளாக மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இந்திலி, மேலூர், ஏமப்பேர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். அப்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்களை உடனடியாக மீட்டு தரவேண்டும் என கோஷம் எழுப்பினர்.

வாக்குவாதம்

பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், கிராமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்ட கிராமமக்கள் கலெக்டர் அலுவலத்தில் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்