கிராமமக்கள் திடீர் சாலை மறியல்

கச்சிராயப்பாளையம் அருகே நடைபாதையின் குறுக்கே தடுப்பு சுவர் அமைத்ததால் கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2023-07-07 18:45 GMT

கச்சிராயப்பாளையம்

தடுப்பு சுவர்

கச்சிராயபாளையம் அருகே மாத்தூர் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் கடந்த 40 ஆண்டு காலமாக ஒரு தனி நபருக்கு சொந்தமான இடத்தை நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் மாற்று சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவர் நடைபாதையின் குறுக்கே தடுப்பு சுவர் அமைத்ததால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந் தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் மாத்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் நடந்து செல்லாத வகையில் தீண்டாமை சுவர் எழுப்பி உள்ளதாகவும், அந்த சுவரை அகற்ற வேண்டும் எனவும் புகார் தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி தீர்வுகாணலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்