'செப்டிக் டேங்க்' விஷவாயு பரவியதில் 100 மாணவ-மாணவிகள் வாந்தி, மயக்கம்

ஓசூர் மாநகராட்சி பள்ளியில் ‘செப்டிக் டேங்க்’ கசிந்து விஷவாயு பரவியதில் 100 மாணவ-மாணவிகள் வாந்தி, மயக்கம் அடைந்தனர்.

Update: 2022-10-14 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் மாநகராட்சி பள்ளியில் 'செப்டிக் டேங்க்' கசிந்து விஷவாயு பரவியதில் 100 மாணவ-மாணவிகள் வாந்தி, மயக்கம் அடைந்தனர்.

மாநகராட்சி பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் தமிழ், தெலுங்கு, உருது பள்ளிகள் உள்ளன. தமிழ் வழி பள்ளியில் மட்டும் 1,500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே நேற்று தமிழ் வழி பள்ளியில் மதியம் உணவு வேளைக்கு பின்னர், மாணவ-மாணவிகள் வகுப்புகளில் இருந்தனர்.

அப்போது மதியம் 2.30 மணி அளவில் 6-வது மற்றும் 7-வது வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவிகளை திடீரென்று விஷ வாயு தாக்கியது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பள்ளி வகுப்பறையில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மற்ற மாணவ-மாணவிகள் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்தனர்.

மருத்துவமனையில் சேர்ப்பு

இதையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பள்ளிக்கு வந்த ஆம்புலன்ஸ்களில் மாணவ-மாணவிகள் ஏற்றப்பட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். வாந்தி, மயக்கம் அடைந்த மாணவ-மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்ற மாணவர்கள் அருகிலுள்ள ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர்.

இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து குழந்தைகளின் பெற்றோர்கள் பதறியடித்தவாறு பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம் மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் குவிந்தனர். மேலும், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் அரசு அதிகாரிகள், டாக்டர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கலெக்டர்

தொடர்ந்து விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக வாந்தியை கட்டுப்படுத்த உப்பு, சர்க்கரை கரைசல், மற்றும் எலக்ட்ரால் கரைசல் ஆகியவை வழங்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.

அவர் மருத்துவமனை வளாகத்தில் வெவ்வேறு இடங்களில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த மாணவ-மாணவிகளை நேரில் பார்வையிட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகளையும் நேரில் சந்தித்து அவர்களுக்கும், பெற்றோருக்கும் தைரியம் கூறினார்.

தீவிர சிகிச்சை

இதையடுத்து விஷ வாயு தாக்கியதில் வாந்தி, மயக்கம் அடைந்த மாணவி சுவேதா, மாணவர் சக்தி ஆகிய 2 பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாணவ-மாணவிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பள்ளியில் உள்ள செப்டிக் டேங்கில் கசிவு ஏற்பட்டு விஷ வாயு பரவியதால் மாணவர்களுக்கு மூச்சு திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்