சேவூர் பந்தம்பாளையத்தில் டாஸ்மாக் பாரை உடனடியாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேவூர் பந்தம்பாளையத்தில் டாஸ்மாக் பாரை உடனடியாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
சேவூர்
சேவூர் பந்தம்பாளையத்தில் டாஸ்மாக் பாரை உடனடியாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் பார்
அவினாசியை அடுத்த சேவூர் பந்தம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் பார், மனமகிழ் மன்றம் அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த 6 மாதத்துக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு,கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்டவற்றிக்கு மனு கொடுத்தனர். மேலும் வேட்டுவபாளையம், சேவூர், முறியாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சி கிராம சபை கூட்டத்திலும் டாஸ்மாக் பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 17 -ந் தேதி டாஸ்மாக் பார் திறக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் பாரை அப்புறப்படுத்த வேண்டும் என்று பார் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த வருவாய்த்துறை, போலீசார் ஆகியோர் ஒருவார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் 15 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கைவில்லை. இதற்கு மாறாக பார் திறக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.
மீண்டும் போராட்டம்
இதையடுத்து டாஸ்மாக் பாரை மூடி அப்புறப்படுத்தும் வரை போராட்டத்தை தொடருவோம் என கூறி வேட்டுவபாளையம, சேவூர், முறியாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 10 மணி முதல் டாஸ்மாக் பார் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் டாஸ்மாக் பாரை நிரந்தரமாக மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனக்கூறி மாலை 5 மணி வரை தொடர்ந்ததால், பள்ளி முடிந்து வந்த அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து அவினாசி தாசில்தார் மோகனன்,துணை போலீஸ் சூப்பிரண்டு பவுல்ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் டாஸ்மாக் பார் திறக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சேவூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டது.மேலும் இந்த போராட்டத்தின் போது கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண்மணி அப்பகுதியில் உள்ள மரத்தில் சேலையால் தொட்டில் கட்டி குழந்தையை தூங்க வைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.