பணி ஓய்வுபெறும் நாளில் வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம் - பேரூராட்சிகள் பணிகள் இயக்குனர் நடவடிக்கை
பணிக்காலத்தில் அரசுக்கு ரூ.10 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் பணி ஓய்வு பெறும் நாளில் வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவர் பிரேமா (வயது 60). செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த பிரேமா வயது மூப்பின் காரணமாக நேற்றுடன், அரசு பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் இருந்தார்.
இந்நிலையில் செயல் அலுவலர் பிரேமா தனது பணிக்காலத்தில் குடிநீர் விநியோகம், தெரு விளக்கு, சுகாதார பொருட்கள் கொள்முதல் செய்ததற்கு, டெண்டர் நடைமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்ற புகார் எழுந்தது.
அதன் மூலமாக, அரசிற்கு, 10 கோடியே 74 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியுள்ளாதாக கூறி வந்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் செயல் அலுவலர் பிரேமா பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக பேரூராட்சி பணிகள் இயக்குனர் கிரன்குர்லா உத்தரவிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பணி ஓய்வுபெறும் நாளில் வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா பணியிட நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அரசு அலுவலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.