பில்லூர் அணையில் தண்ணீர் திறப்பு
தொடர் மழையால் நீர்மட்டம் 97 அடியை எட்டியதால் பில்லூர் அணை திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.;
மேட்டுப்பாளையம்
தொடர் மழையால் நீர்மட்டம் 97 அடியை எட்டியதால் பில்லூர் அணை திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பில்லூர் அணை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பில்லூர் அணை உள்ளது. இந்த அணை, நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்டது. பில்லூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி.
இந்த நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 3-ந் தேதி அணையின் நீர்மட்டம் 76 அடியாக இருந்தது.
இதைத்தொடர்ந்து பெய்த மழை காரணமாக நேற்று முன்தினம் மாலை பில்லூர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரம் 76 அடியில் இருந்து 88 அடியாக ஒரே நாளில் 12 அடி உயர்ந்தது.
தண்ணீர் திறப்பு
பில்லூர் அணைக்கு நேற்று காலை 9.30 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் உயரம் 96.5 அடியாக உயர்ந்தது. நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக காலை 10 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது.
இதற்கிடையே பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகள் திறக்கப் பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. காலை 11.30 மணி நிலவரப் படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையின் நீர்மட்டத்தை 97 அடியில் ஒரே சீராக வைத்திருக்க மின் உற்பத்திக்காக அணையில் ஒரு எந்திரத் தை இயக்கியதில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி மற்றும் மதகு கள் வழியாக வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி என மொத்தம் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்க ளுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலாஜி, தாசில்தார் மாலதி ஆகியோர் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்வையிட்டனர். அப்போது ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பு கருதி மேடான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தினர்.
தீயணைப்பு வீரர்கள் தயார்
அவர்களுடன் மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், இன்ஸ் பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப் -இன்ஸ்பெக்டர்கள் செல்வநாய கம், முருகநாதன் மற்றும் அரசு பிற துறை அதிகாரிகள் இருந்த னர். மேலும் காவல் துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். வெள்ள அபாயம் குறித்து வருவாய் துறை சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.