257 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நெருப்பூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டம் முகாமில் 257 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

Update: 2022-09-14 16:52 GMT

நெருப்பூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டம் முகாமில் 257 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

பென்னாகரம் வட்டம் நாகமரை ஊராட்சி நெருப்பூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். ஜி.கே.மணி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி வரவேற்று பேசினார். இதில் ஒன்றியக்குழு தலைவர்கள் பழனிசாமி (ஏரியூர்), கவிதா ராமகிருஷ்ணன் (பென்னாகரம்), ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், தாசில்தார் அசோக்குமார், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், மீனா மற்றும் அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

மக்களுக்கான திட்டங்கள் கடைக்கொடி மக்களுக்கு சென்றடையும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் முனைப்போடு பணியாற்றி வருகின்றது. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் விண்ணப்பித்து, அதனை பெற்று பயனடைய வேண்டும். அவ்வாறு பெறுகின்ற திட்டத்தின் மூலம் தங்களின் வாழ்க்கைத்தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும்.

நலத்திட்ட உதவிகள்

முதல்-அமைச்சர் மக்களின் வளர்ச்சிக்கும், வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். அத்தகைய திட்டங்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கடைக்கோடி கிராமங்களில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் நெருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் வாழை, மிளகாய், மஞ்சள் பயிரிடுவதற்கான பயிர்க்கடன் உள்பட மொத்தம் 257 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார். முன்னதாக, மக்கள் தொடர்புத்திட்ட முகாமினை முன்னிட்டு பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்