பயனாளிகளுக்கு ரூ.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

ராமநாதபுரத்தில் நடந்த குடியரசு தின விழாவில் பயனாளிகளுக்கு ரூ.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

Update: 2023-01-26 18:40 GMT

ராமநாதபுரத்தில் நடந்த குடியரசு தின விழாவில் பயனாளிகளுக்கு ரூ.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

குடியரசு தின விழா

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்க விட்டு சுதந்திரத்தின் பெருமையை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

முன்னதாக விழா நடைபெறும் இடத்திற்கு வந்த கலெக்டரை மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

நலத்திட்ட உதவிகள்

விழாவில், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 61 பேருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதக்கங்களையும், மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய 63 போலீசாருக்கு நற்சான்றிதழ்களையும், சிறப்பாக பணியாற்றிய 190 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார். விழாவில் 49 பயனாளிகளுக்கு ரூ.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் பரதநாட்டியம்,சிலம்பாட்டம், கரகம், பறை நிகழ்ச்சி, கோலாட்டம், ராமநாதபுரம் ஜவகர் சிறுவர் மன்றத்திலிருந்து கணியன் கூத்து மற்றும் தேவராட்டம் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. துரை, கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், ராமநாதபுரம் பயிற்சி உதவி கலெக்டர் நாராயண சர்மா உள்பட அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்