தேர்தல் வழக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன்..? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி

தேர்தல் வழக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

Update: 2024-04-18 23:59 GMT

கோப்புப்படம்

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி, தன் மீதான தேர்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதேபோல விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, கடந்த 2019,2021-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத்தேர்தல், சட்டமன்றத்தேர்தல்களில் பணப்பட்டுவாடா சம்பந்தமாக எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன? அந்த வழக்குகளில் தண்டனை அளிக்கப்பட்டு உள்ளதா? என அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.

அதன்படி டி.ஜி.பி. சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், 2019-ம் ஆண்டில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 4,349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதில்1,733 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல 2021-ம் ஆண்டு நடந்த தேர்தல் சம்பந்தமாக 8,655 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, அவற்றில் 1,414 வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த வழக்கை நீதிபதி புகழேந்தி நேற்று விசாரித்தார்.

அப்போது நீதிபதி, தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான முழு விவரங்களையும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஏன் பதிவு செய்யவில்லை?

அவ்வாறு செய்தால்தான் இந்த தகவல்களை பார்த்து, அடுத்த தேர்தலின்போது இந்த நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள். இதை செய்யாததால், பணப்பட்டுவாடா சம்பவங்கள் அதிகரிக்கின்றன என கவலை தெரிவித்தார்.

விசாரணை முடிவில், தேர்தல் வழக்குகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்