தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

Update: 2022-11-04 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. காயல்பட்டினத்தில் 99 மில்லிமீட்டர் மழை பதிவானது.

பருவமழை

தமிழகத்தில் கடந்த 29-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது.

நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 99 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதே போன்று தூத்துக்குடி- 19, ஸ்ரீவைகுண்டம்- 76, திருச்செந்தூர்- 13, குலசேகரன்பட்டினம்- 7, சாத்தான்குளம்- 5, கோவில்பட்டி- 1, கழுகுமலை- 9, கயத்தாறு- 78, கடம்பூர்- 82, வைப்பார்- 28, ஓட்டப்பிடாரம்- 42, மணியாச்சி- 12, கீழஅரசடி- 8, வேடநத்தம்- 15 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

விவசாய பணிகள்

தூத்துக்குடியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. மதியம் 2 மணி முதல் 4 மணி வரை தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் அணைகளில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். அத்திமரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் விதைகளை பாவும் பணிகள் நேற்று நடந்தன. தொடர்ந்து உழவு செய்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் சுறு, சுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்