தளிக்கோட்டையில் பயணிகள் நிழலகம் கட்டும் பணி மீண்டும் தொடங்கப்படுமா?
தளிக்கோட்டையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்ட பயணிகள் நிழலக கட்டும் பணியை மீண்டும் தொடங்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.;
மன்னார்குடி:
தளிக்கோட்டையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்ட பயணிகள் நிழலக கட்டும் பணியை மீண்டும் தொடங்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பயணிகள் நிழலகம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை ஊராட்சியில் தளிக்கோட்டை, மேல தளிக்கோட்டை மற்றும் வடசேரி சாலை இணைப்பு சந்திப்பில் 2011-ம் ஆண்டு பயணிகள் நிழலக கட்டுமான பணி தொடங்கியது.
மேல தளிக்கோட்டை பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த பயணிகள் நிழலக கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் கட்டிடப் பணிகள் முடிவடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரைகுறையாக கட்டிடம் உள்ளது.
12 ஆண்டுகளாக பணிகள் முடியவில்லை
12 ஆண்டுகளாக பணிகள் முடிவடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிழலக கட்டிடத்தில் சிமெண்டு பூச்சி பூசப்படவில்லை, தளம் போடப்படவில்லை, இருக்கைகள் அமைக்கப்படவில்லை என பல பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் வெயில், மழையில் நின்று பஸ்களில் ஏறி செல்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகள் இந்த கட்டிடத்தில் மதுபாராக பயன்படுத்தி வருகின்றனர்.
மீண்டும் தொடங்க வேண்டும்
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் நிழலக கட்டிடம் கட்டும் பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.