உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படுமா?
உழவர் சந்தைகள் மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
உழவர் நலனில் அக்கறை கொண்ட மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உழவர்களும், அதே நேரத்தில் பொதுமக்களும் பரஸ்பர பலன் பெற வேண்டும் என்பதற்காக நகர்ப்புறங்களில் உழவர் சந்தையை கொண்டு வந்தார்.
உழவர்சந்தை
அந்த வகையில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. விருதுநகர் உழவர் சந்தை இந்நகர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள புல்லலக்கோட்டை ரோட்டில் கடந்த 13.11.2000-ம் ஆண்டு திறக்கப்பட்டது.
இந்த உழவர் சந்தையில் 48 கடைகள் உள்ளன. உழவர் சந்தை தொடங்கிய காலத்தில் 48 கடைகளும் விவசாயிகளுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. காலப்போக்கில் உழவர் சந்தையின் செயல்பாடு முடங்கி விட்டது. கொரோனா பாதிப்பு காலத்தில் உழவர் சந்தை மீண்டும் உயிர் பெற்றது. ஏனெனில் காய்கறி சந்தைகள் செயல்படாத நிலையில் விவசாயிகளும், காய்கறி வியாபாரிகளும் உழவர் சந்தைக்கு படையெடுத்து வந்தனர். இதனால் நகர் மக்கள் உழவர் சந்தையை தேடி வந்து காய்கறிகள் வாங்கும் நடைமுறை இருந்து வந்தது.
அனுமதி அட்டை
தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு மீண்டும் உழவர் சந்தையின் செயல்பாட்டிலும் தளர்வு ஏற்பட்டுவிட்டது. தற்ேபாது விருதுநகர் உழவர்சந்தையில் 3 கடைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
இதுகுறித்து உழவர் சந்தை நிர்வாக அதிகாரி ராஜா கூறியதாவது:- 126 விவசாயிகளுக்கு உழவர் சந்தை அனுமதிஅட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் ஆன்லைன் முறையில் வியாபாரம் மேற்கொண்டு வருகின்றனர். உழவர் சந்தை வளாகத்தில் 5 மெட்ரிக் டன்அளவிற்கு கிட்டங்கி குளிர்பதன வசதியுடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உழவர் சந்தை மீண்டும் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பஸ்வசதி
உழவர்சந்தையின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
வில்லிபத்திரி செல்வகுமார்:- விருதுநகர் உழவர் சந்தைக்கு விவசாயிகள் காய்கறிகளுடன் வந்து வியாபாரம் செய்யும் வகையில் போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை. அனைத்து பஸ்களும் நேரடியாக பழைய பஸ் நிலையத்திற்கு சென்று விடுவதால் விவசாயிகள் அங்கு இறங்கி தங்கள் காய்கறிகளை, தனியார் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்கின்றனர். எனவே உழவர் சந்தைக்கு பஸ்வசதி செய்து தரப்பட வேண்டும்.
விருதுநகர் பேச்சியம்மாள்:-
உழவர் சந்தைக்கு அருகில் தான் நான் வசித்து வருகிறேன். உழவர் சந்தையில் சென்று காய் வாங்க வேண்டும் என்றால் அங்கு எதுவும் இருப்பதில்லை. அனைத்து கடைகளும் காலியாக உள்ளன. இதனால் தொலைவில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே உழவர் சந்தையில் அனைத்து காய்கறிகளும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேம்படுத்த வேண்டும்
தொம்பகுளம் விவசாயி நேரு:-
விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் காய்கறிகளை இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்ய அரசால் உழவர்சந்தை உருவாக்கப்பட்டது. உழவர்சந்தை மூலம் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்பெற்று வருகின்றனர். எனவே உழவர்சந்தையை இ்ன்னும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணைக்கரைபட்டி கருப்பையா:-
சாத்தூர் உழவர்சந்தைக்கு செல்ல பஸ்வசதி இல்லை. முன்பு விவசாயிகள் பஸ்சில் காய்கறி கொண்டு செல்ல கட்டணம் கிடையாது. தற்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே பஸ்வசதி ஏற்படுத்தி தந்தால் உழவர்சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
குளிர்பதன கிடங்கு
அருப்புக்கோட்டை விவசாயி ராமர்:-
அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. 70 கடைகள் உள்ள உழவர் சந்தையில் தற்போது 38 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த உழவர் சந்தைக்கு 15-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் தங்கள் விளைசெய்யும் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தையில் அனைத்து கடைகளும் செயல்படும் பட்சத்தில் ஏராளமான பொதுமக்கள் உழவர் சந்தயை நாடி வருவர்.
இதுகுறித்து உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மகாலட்சுமி கூறுகையில்:- உழவர் சந்தையில் விவசாயிகளுக்காக குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி கோவிந்தராஜ்:-
ஸ்ரீவில்லிபுத்தூர் உழவர்சந்தை முன்பு சிறப்பாக செயல்பட்டது. தற்போது சில விவசாயிகள் தான் விற்பனைக்கு பொருட்களை கொண்டு வருகின்றனர். உழவர் சந்தையில் அரசு உரங்களை மானியமாக விற்க வேண்டும்.