சுப்பையா கவுண்டன்புதூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
சுப்பையாகவுண்டன் புதூரில் ரெயில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.;
ஆனைமலை
சுப்பையாகவுண்டன் புதூரில் ரெயில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் அவதி
கோவை மாவட்டத்தில் வளர்ந்து வரும் பகுதியாக ஆனைமலை உள்ளது. ஆனைமலையை சுற்றி ஆழியாறு, வால்பாறை, டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும், பிரசித்திபெற்ற மாசாணி அம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இதனால் இந்த பகுதிகளுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களிலும் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஆனைமலை-பொள்ளாச்சி சாலையில் சுப்பையா கவுண்டன்புதூர் ரெயில்வே கிராசிங் பகுதியை கடந்துதான் வரவேண்டும். பொதுவாக காலை, மாலை, இரவு நேரங்களில் ரெயில்வே கேட் அடைக்கப்படுவதால் ரெயில்வே கேட் பகுதியில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் சுப்பையாகவுண்டன்புதூர் பகுதியில் ரெயில்வே பாலம் கட்டவேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெயில்வே பாலம்
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
சுப்பையா கவுண்டன்புதூர் ரெயில்வே கிராசிங் பகுதியில் ஒரு பகுதியில் 4-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும், மற்றொரு புறத்தில் அரசு பள்ளிகளும் உள்ளன. காலை நேரத்தில் சுப்பையா கவுண்டன்புதூர் ரெயில் கேட் அடைக்கப்படுவதால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பள்ளி வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர ஆனைமலைக்கு சுற்றுலா வருபவர்களின் வாகனங்களும் ரெயில்வே கேட் பகுதியில் சிக்கி கொள்கின்றன.
ரெயில்வே கேட் திறந்தவுடன் அனைத்து வாகனங்களும் முண்டியடித்து செல்வதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சில நேரங்களில் இந்த போக்குவரத்து நெரிசலில் அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்சும் சிக்கிக்கொள்கின்றன. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சுப்பையாகவுண்டன்புதூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.