கோவை, பொள்ளாச்சியில் இருந்து வரும் அரசு பஸ்கள் சர்வீஸ் சாலை வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?-கோவில்பாளையம் மக்கள் எதிர்பார்ப்பு
கோவை,பொள்ளாச்சியில் இருந்து வரும் அரசு பஸ்கள் கோவில்பாளையம் சர்வீஸ் சாலை வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள்.;
கிணத்துக்கடவு
கோவை,பொள்ளாச்சியில் இருந்து வரும் அரசு பஸ்கள் கோவில்பாளையம் சர்வீஸ் சாலை வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள்.
கோவில்பாளையம் சர்வீஸ் சாலை
கோவை,பொள்ளாச்சியில் இருந்து தினசரி 150-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இதில் கோவையில் இருந்து கிளம்பும் பஸ்களில் சில அரசு மற்றும் தனியார் பஸ்கள் கோவையில் இருந்து பொள்ளாச்சி கிளம்பும்போது கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் மேம்பாலத்தில் சென்று விடுகின்றன. இந்தப் பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் குறிப்பாக அரசு பஸ்கள் காலை, மாலை நேரங்களில் கோவில்பாளையம், தாமரைக்குளம் பகுதியில் சர்வீஸ் சாலையில் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றன.
ஆனால் காலை 10 மணிக்கு மேல் மாலை 3 மணி வரை பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக கோவை செல்லும் பஸ்கள் கோவில் பாளையம் சர்வீஸ் சாலையில் செல்லாமல் நான்கு வழிச்சாலையின் நடுப்பகுதியிலே சென்று விடுகிறது. இதனால் மதியம் முதல் மாலை வரை கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோவை செல்லும் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் அவதி
அதேபோல் பயணிகள் நீண்டநேரம் பஸ்சுக்காக கால் கடுக்க சர்வீஸ் சாலையில் நின்று ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதனால் குறித்த நேரத்தில் கோவில்பாளையத்திலிருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை, பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் சர்வீஸ் சாலையில் வராததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கோவை, பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள கோவில்பாளையத்திற்கு பஸ்கள் வருவதற்கு வசதியாக நான்கு வழி சாலையில் இருந்து சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. மற்ற நேரங்களில் பொள்ளாச்சி, கோவை பகுதியில் இருந்து வரும் பஸ்கள் சர்வீஸ் சாலைக்கு வராமல் நான்கு வழிச்சாலையில் சென்று விடுகின்றன.
இதனால் கிராம பகுதியில் உள்ள மக்கள் நாங்கள் சரியான நேரத்துக்கு பஸ் ஏறி செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. ஆகவே வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கோவில்பாளையம் பகுதியில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நின்று கோவை பொள்ளாச்சியில் இருந்து வரும் பஸ்கள் கோவில்பாளையம் சர்வீஸ் சாலையில் சென்று பொதுமக்கள் மற்றும் பயணிகளை ஏற்றி செல்கிறதா என்பதை கண்காணிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.