குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

கூத்தாநல்லூர் அருகே உள்ள குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-10-03 18:45 GMT

கூத்தாநல்லூர்:

பூதமங்கலம் சாலை

கூத்தாநல்லூர் அருகே பூதமங்கலம் சாலை உள்ளது. இந்த சாலையில், தனியார் பஸ், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.

மேலும், பூதமங்கலம், புதுக்குடி, கீழகண்ணுச்சாங்குடி, வடபாதி, காவாலக்குடி, திருமாஞ்சோலை, கண்கொடுத்தவனிதம், பருத்தியூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, திருவாரூர், மன்னார்குடி போன்ற நகர பகுதிகளுக்கும், ஏனைய பகுதிகளுக்கும் சென்று வருவதற்கு இந்த பூதமங்கலம் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இந்த நிலையில், இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. சாலையின் இடையே ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும், மழைக்காலங்களில் சாலையோரங்களில் மழை நீர் தேங்கி நின்று சேரும் சகதியுமாக ஆவதுடன், மணல் பகுதியிலும் பள்ளம் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமன்றி வாகன ஓட்டிகள் அவ்வப்போது நிலைதடுமாறு விழுந்து சிறு சிறு விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே, மழைகாலங்கள் தொடங்குவதற்கு முன்னர் இப்பகுதி மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்