புதர் மண்டி கிடக்கும் சூலக்கல் ஆறு தூர்வாரப்படுமா?
பொள்ளாச்சி அருகே புதர் மண்டி கிடக்கும் சூலக்கல் ஆறு தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே புதர் மண்டி கிடக்கும் சூலக்கல் ஆறு தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
சூலக்கல் ஆறு
பொள்ளாச்சி அருகே சூலக்கல் வழியாக ஆறு செல்கிறது. இந்த ஆற்றிற்கு கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி, செட்டியக்காபாளையம், பட்டணம் பகுதிகளில் பெய்யும் மழைநீர் மூலம் நீர்வரத்து உள்ளது. இந்த ஆற்றுநீர் புலிப்பாறை அணைக்கு செல்கிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்களில் ஆற்றில் மழைநீர் வெள்ளமாக பாய்ந்தோடும். இதனால் ஆற்றை ஓட்டி உள்ள பகுதிகளில் தோட்டங்களில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயரும். கடந்த ஆண்டு பெய்த மழைக்கு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கிடையில் தற்போது ஆறு இருப்பதே தெரியாத அளவிற்கு புதர்மண்டி கிடக்கிறது. இதனால் மழை பெய்தும் ஆற்றில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இருப்பது ஆறு தானா?
சூலக்கல் வழியாக செல்லும் ஆற்றில் பருவமழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு மாதமாக பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வருகிறது. மழை பெய்தும் சூலக்கல் ஆற்றில் பெரிய அளவில் தண்ணீர் செல்லவில்லை. இதற்கு ஆற்றில் ஆள் உயரத்துக்கு வளர்ந்து உள்ள புதர்கள் தான் காரணம்.
மழைக்காலத்திற்கு முன்பாக ஆற்றை தூர்வாரி இருந்தால் தண்ணீர் செல்வதற்கு வசதியாக இருக்கும். ஆனால் அதிகாரிகள் ஆற்றை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சூலக்கல்லில் இருப்பது ஆறு தானா? என்ற சந்தேகம் எழுகிறது. தற்போது ஆறு புதர்காடு போன்று காட்சி அளிக்கிறது. இந்த ஆற்று நீரை நம்பி ஏராளமான கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் தடுப்பணைகள் உள்ளன. எனவே ஆற்றை தூர்வாரி மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.